வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Tuesday, August 23, 2011

நானும் என் சமூகமும்

என் பார்வையில் சமுகம் எப்படி இருக்கின்றது என்று யோசித்து பார்க்கையில், முதலில் நான் யார் இதை யோசிப்பதற்கு என்று தோன்றுகிறது. பின் நானும் இதில் ஓர் அங்கம் அதை விட எனக்காக நான் வாழும் சமுகத்தை என்னை விட யாரும் நிர்ணயித்துவிட முடியாது என்பதால் நானே எழுதுகிறேன். இது வெறும் என் பார்வை மட்டுமே !
 என் அன்றாட பொழுதில் நான் அதிகபட்சம் புதிதாக மனிதர்களை சந்திப்பது அரிது. ஆகையில் நானும் எனக்கு ஏற்கனவே நன்கு  பரிச்சையமானவர்களே. இருப்பினும் சுற்றி நடப்பவைகளில் கவனம் செலுத்த முடியாமல் இல்லை. ரொம்ப பெரிதாக முனைந்து முனைந்து ரசித்தாலும் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை. கோபம், வெறுப்பு, தேடல், ஆசை, வக்கிரம் இவையே சமூகத்தில் புலப்படுகின்றன. சினிமா, நாட்டு நடப்பு, குடும்பம், காதல், நட்பு, வேலை, உரையாடல் இவை அனைத்திலுமே ஒரு முட்டுக்கட்டை இருக்கத்தான்   செய்கிறது. நகரத்தில் வாழ்வதினால் இவற்றை இன்னும் சுகமாக சுமக்க வேண்டி இருக்கிறது. முதலில் வெளி உலகிலிருந்து வருவோம். எவ்வளவு அரிதான செய்தியை படித்தாலும்  அது ஆச்சரியத்துடனே நின்று விடுகிறது. மிஞ்சி மிஞ்சி போனால் வருத்தமான செய்திக்கு கொஞ்சும் "து து து" போடுகிறோம். மற்றபடி எதுவும் எந்த தாக்கத்தையும் நம் மக்களிடையே ஏற்படுத்துவதில்லை. ஏன் டீ கடையில் கூட நின்று யாரும் இங்கு பெரிதாக பேசுவது இல்லை. ஆனால் இலவசங்களை பற்றி மட்டும் பேசுகிறார்கள்.
பெரிதாக ஏதாவது நடந்தால் கொஞ்சம் கவனம் காட்டுகிறார்கள்.
இப்பொழுது சினிமாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இன்னும் நம் மக்களிடையே சினிமாவிற்கான மோகம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் இருப்பவர்களுக்கோ அது இன்னமும் அதிகமாகிவிட்டது. நிறைவையும் ஆழ்ந்த சிந்தனையும் தரக்கூடிய சினிமா கிடைப்பது அரிதாகிவிட்டது. ஒருவேளை நமது ரசனை சரியல்லையோ என்னவோ ? பெரிய வியாபாரமாகவே பார்க்கப்படும் நம் சினிமா கொஞ்சம் மன நிறைவையும் அளித்தால் மிகவும் நன்று.
என் பிராயத்தில் இருக்கும் வயதினருக்கு நேரத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, எப்படி போகிறது என்றும் தெரியவில்லை. எங்கள் இளசமுகத்தினரின் கவர்ச்சிக்காக நிறைய விஷயங்கள் இங்கே இருக்கின்றன. நல்ல வேலை, நிறைய பணம், அதிக பகட்டு, ஆபாசம், பைக், கார், தேவையில்லா இங்கிலீஷ், சும்மா சுற்றி பார்ப்பதற்கு ஷாப்பிங் மால், பார்டி, அடுத்தவனுடைய காதலி, என எங்களை ஆக்ரமித்துக்கொண்ட மோகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை உண்மையாக ரசனைக்காக பயன்படுத்தத் தெரியாமல் வெறும் பந்தாவுக்கு மட்டுமே அனுபவிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கின்றோம். முகமுடி அணிந்த முட்டாள்களாய் இருக்கிறோம். மற்றபடி பெரிதாக எங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. குடும்ப சூழ்நிலைகளை எடுத்துக்கொண்டால் அது வேறு ஒரு பாதையில் போய்கொண்டிருப்பதாகேவே தோன்றுகிறது. பிள்ளைகளை புரிந்தது போல் பெற்றவர்கள் நடிப்பதும், அதற்கு எற்றார்போல் பிள்ளைகள் ஆடும் நாடகமும் என்னவென்று சொல்வது. உண்மையான பாசம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஏதுவான சூழ்நிலையை குடும்பங்கள் அமைப்பதில்லை. மற்ற சொந்தங்களை பற்றி மறந்து பொய் பல நாட்கள் ஆயிற்று. ஏன் நான் கடைசியாக என் பெரியப்பாவிடம் எப்போது பேசினேன் என்று ஞாபகம் இல்லை. அதற்கு அவசியம் இல்லாதது போலவே தோன்றிவிட்டது. அடுத்தது கல்வி. அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நல்ல தொழில். அதிக வருமானம். விருப்பம், ஆர்வம் என்பதற்கு ஏதுவாய் இல்லாமல் வெறும் நல்ல வேலை அதிக CTC இவற்றை வைத்தே மாணவர்கள் முன் வைக்கப்படுகிறது. காஸ்ட்லி ஆன MBA அல்லது ஏதாவது வெளிநாடுகளில் MS ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இலக்கிய கல்வியை கொஞ்ச நாளில் syllabus இல் இருந்து எடுத்துவிடுவோம். சமுகத்தின் என்னுடைய புரிதல் இதுவே என படுகிறது. இந்த புரிதல் சரியா தவறா என்று தெரியவில்லை. அனால் இது ஆரோக்யம் இல்லை என்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த புரிதலில் என்னுடைய தவறு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அந்த அளவு என் சமூகத்திடமும் இருக்கிறது. தன்னிச்சையாய் எதுவுமே சாத்தியம் இல்லை. இதற்கு விடை கூட என்னிடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. அதை சொல்லவும் அறுகதை இல்லை. இருப்பினும் என்றோ ஒரு நாள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் இந்த பழைய அழுகிய சித்தாந்தமும் சமூகத்தையும் அசை போடவாவது இந்த பதிவுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்பிக்கையுடன்,
விக்...



Followers