வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Tuesday, September 17, 2013

எல்லாம் தெரிஞ்சுக்க ஆசை !!!

எல்லோருக்கும் ஏதாவது செய்தி தேவைப்பட்டு கொண்டிருக்கின்றது. உடல் நலத்தை பற்றியோ, தங்கள் ஆபீஸ் பற்றியோ, சினிமாவோ, நடப்புகள் பற்றியோ, தங்களின் புதிய முயற்சிகள் பற்றியோ, காதல், கல்யாணம் இப்படி நம் சுற்றம் பற்றி எதாவது ஒரு துணுக்கு செய்தி நம்மை ஆச்சிரிய படுத்துவதற்கும் வாதங்களை சுவாரசிய படுத்துவதற்கும் தேவைப்பட்டுத்தான் இருக்கின்றது. ஆனால் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் ஓரளவுக்குத்தான் அவை உபயோகமாய் இருக்கின்றன. எதை பத்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இப்பொழுது அது ஒரு பெரிய விடயம் இல்லை. இணையமும் கூகுளும் இருக்கும் வரை நீங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. கர்னாடக சங்கீதத்திலிருந்து புதிதாய் வந்த நீயா நானா எபிசொட் வரை அத்தனையும் கிடைக்கும். உங்களுக்கு புதியதாய் எதன் மீது மோகம் வந்தாலும் சரி, அல்லது கொஞ்சம் காலம் முன்னரோ பின்னரோ  வாழ்வது போல் இருந்தாலும் சரி. அத்தனைக்கும் நிறைய புலம்பல்களும் புதிய ஆச்சர்யங்களும் உங்கள் browser இல் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றது. உங்களுக்கு தேவை எல்லாம் கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சம் பயித்தியக்காரத்தனமும் தான். மற்றதை எல்லாம் உங்கள் நேரம் பார்த்துக்கொள்ளும். இந்த முயற்சிகளை எடுக்க, நீங்கள் கொஞ்சம் வாழ்கையின் சுவாரசிய கேள்விகளுக்கு பதில் தேட முற்பட்டால் தான் நடக்கும். இல்லையென்றால் சவாகாசமாக நீங்களாகவே ஒரு உலகத்தை உங்களுக்கு உருவாக்கிக்கொண்டு, சரி தவறுகளை நிர்ணயித்துக்கொண்டு, பின்னாளில் அவைகள் அனைத்தும் முட்டாள்தனம் என்று பின்னொரு காலத்தில் உணர்ந்து கொண்டு வாழலாம். ஆதலால், பெரிதாக எதற்கும் உங்களை தொடர்பு கொண்டு பார்க்காதீர்கள். இந்த உலகம் மிக பழமையானது. உங்களுக்கு பின்னாடியும் முன்னாடியும் பல பேர் வாழ்ந்து முடித்தும் வாழ போவதற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பட்டா போட்டுக்கொண்ட இடமும், உங்கள் காதலியும், உங்கள் எண்ணப் பிரதிகளும், பிடித்த இசையும், இப்படி எல்லாவையும் இந்த உலக நியதிக்கு பொதுவானது தான். செயற்கைத்தனமான போலியான நம் மனப் புலம்பல்களுக்காக அவைகளை சொந்தம் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.  எல்லார்க்கும் இங்கு எல்லாமும் உண்டு. ஆனால் எதுவும் நிரந்திரம் இல்லை. காலத்தின் கட்டளைக்கு ஏற்ப இந்த பூமி மாறிக்கொள்வது போல் மாறிக் கொள்ளுங்கள் . முடிந்த வரை நாம் அனைவரும் இலகுவாக இருக்க பழகுவோமே ! ஏன் நமக்குள் இத்தனை இறுக்கம் ? எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நல்லது தான். அதே சமயம் நம் வாழ்வின் ஆச்சர்யங்களையும் நியதியையும் மறக்கத் தேவை இல்லை. அதிக பட்சம் நமக்கு இந்த உலக நடப்புகளோ, வெள்ளிக்கிழமை வெளியாகும் புதிய படத்தை பற்றியோ, அரசாங்கத்தின் சட்ட திட்டத்தை பற்றியோ தெரியாமல் போகும். பரவாயில்லை. யாருக்கு என்ன நஷ்டம். எதனுடனும் தொடர்பு படுத்திக்கொள்ளாமல் அனைத்தையும் தெரிந்து கொள்ள முற்படுங்கள். இதில் பிரச்சனை குறைவு. ஆனால் நிறைவு அதிகம். அப்படியே இதில் அலுப்பு தோன்றினாலும், கொஞ்சம் யோசித்து பார்கையில், உங்கள் சுற்றம் என்ன உங்களுக்கு தெரிந்தவை வற்றா இயங்கிக் கொண்டிருக்கின்றன? இல்லவே இல்லை. எவ்வளவு முக்கினாலும், நாம் சொல்ல விழைவதை அவர்களுக்கு தெரிந்த ஒன்றோடு தான் தொடர்பு படுத்திப் பார்க்கின்றார்கள். அதே சமயம் சுயநலமற்ற இந்த பிரயத்தனங்கள் என்றாவது ஒரு நாள் யாருக்காவது உபயோகம் ஆகத்தான் செய்யும்.அப்பொழுது  எந்த கர்வமும் இல்லாமல் சந்தோசமாக உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர முடியும். இல்லாவிடில் என்ன, அவை உங்களோடு மறைந்து போகும். எப்படியும்  நம் இடுகாடிற்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்படிக்கு,
விக்.

Friday, February 8, 2013

சதுரகிரி சாரல்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மலைகள் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டவை. 800 m க்கு மேல் உள்ள மலைகளுள் எவையெல்லாம் எறக்கூடியதோ, அவை அனைத்தும் தரக்கூடிய அனுபவம் மிக அருமையானது. ஆன்மிகம் அல்லாமல் கூட ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்க வல்லது என்பதை மட்டும் உறுதியாய் என்னால் சொல்லடியும். அதை முதன் முதலில் அனுபவித்தது வெள்ளிங்கிரி மலையில். உடம்பிற்கும் மனதிற்கும் பெரிய சவாலைத் தரும். ஒரு சில இடங்களில் மிக அழகான இயற்கை , மறுபக்கம் உடல் சோர்வு மற்றும் நேரம் இல்லாமை. இவை அனைத்தையும் சமாளிக்கும் திராணியும் அவையே கொடுத்து விடும்.அப்படி ஒரு மலை தான் சதுரகிரி. விளையாட்டாய் நண்பர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை இந்த வலைக்குள் இழுத்தேன். மாட்டிக்கொண்டார்கள். கிளம்பிவிட்டோம்.


தொகுத்துக் கூற முடியாத அளவு அனுபவங்கள். நடந்து செல்லும் மலையின் அருகே இன்னொரு சிகரம். அந்த சிகரத்தின் வழுக்கான முகட்டில் முழைத்த காய்ந்த பதர்கள், அருவி ஓடிய பாதை இப்படி அழகோ அழகு. வெளிச்சம் குன்றிய இரவில், வானத்தைப்   பார்த்தால், ஒளிரும் நட்சத்திரங்கள் மிக அருகில். பின்னர், மிகுந்த குளிரில் மன்றாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு தேவதை தென்பட்டாள். ஆம், அப்பொழுது தான் குழித்துவிட்டு, தன நீண்ட கூந்தலை படர விட்டபடி கருப்பு சேலையுடன் வெளியே வந்தாள். ஆபாசமே இல்லாத அழகு. பெண்மையை இப்படியும் ரசித்தது இதுவே முதல் முறை. பிழைப்பிற்காக அங்கு வந்து கடை நடத்துகிறாள், தன் கணவனுடன். இரண்டாம் நாள் காலையில் தவசி பாறையை பார்க்க வேண்டும் என்று இன்னும் சற்று மேலே ஏறினோம். தவசி பாறையின் அடியில் ஒருவர் படுத்தே செல்லக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. ஊர்ந்து சென்று பார்த்தால், உள்ளே ஒரு லிங்கமும், தியானம் செய்யக்  கூடிய அளவிற்கு இடமும் இருக்கிறது. முந்திரிக்கொட்டையாய் முதலில் சென்ற பொழுது, பயங்கர திகிலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. எந்த எண்ணம் பழங்கால மனிதர்களை இப்படி ஒரு தனிமையை தேடிச் செல்ல வைத்தது என்று யோசிக்கையில், முற்காலங்களில் நிறைய தனிமை இருந்தது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. ஏறுகையிலும் இறங்கும் பொழுதும் எண்ணற்ற மனிதர்கள். ஏன் என் நண்பர்கள் கூட அங்கே சென்றவுடன் சற்று வேறு விதமாய்த் தான் தென்பட்டார்கள். அது அந்த இடத்தினாலோ அல்ல வேறு ஏதோ மாற்றத்தின் வித்தாய் கூட அமைந்திருக்கலாம். அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் கூட இது நடந்திருக்கலாம். ஆனால், அந்த மாற்றத்தை மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்னுள் கூட அது எனக்கு முன்பாகவே நடந்தது. மற்றபடி, இன்னும் நிறைய ஆச்சரியங்கள் அந்த மலையில் உள்ளன.அவற்றை சொல்லத் தேவையில்லை. அனுபவமாகவே அது அமைய வேண்டுமே தவிர செய்தியாகி விடக்கூடாது.வருத்தம் என்னவென்றால், அதிக அளவிலான மக்கள் கூட்டம் என்னென்ன விழைவுகளை ஏற்படுத்துமோ, அது அங்கே பலித்து விட்டது. நீங்கள் ஏறிச்சென்று பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தால், அந்த ரம்யம் பிம்பமாக மாறி உங்களுக்குள் ஊடுருவும் போது, கொஞ்சம் அமைதியாக கவனிக்க முற்படுங்கள். அந்த சதுரகிரி சாரல் உங்களையும் வருடட்டும்.
இப்படிக்கு,
விக்.

Tuesday, November 6, 2012

குகைக்குள் சிறு வெளிச்சம்

ஆம் ! இரண்டு மாதமாக ஏதோ குகைக்குள்ளே இருந்து வெளியே வந்தது போல ஒரு உணர்வு. வேலைக்கு போகவில்லை.எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை. பெரிதாக புத்தகம் ஏதும் வாசிக்கவில்லை.சினிமா பார்க்கவில்லை. நெருக்கமான உறவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை, முடி கூட வெட்டவில்லை ! (ரொம்ப நீளமாகிவிட்டது).
ஆனாலும் இந்த இரண்டு மாதமும் மிக ஆழமாகச் சென்றது. என் வாழ்நாளில் இதுவரை எந்த ஒரு காரியத்திற்காகவும் நான் இவ்வளவு நாட்களையும் சக்தியையும் செலவு செய்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு முக்கியமாக எதுவும் எனக்குப் பட்டதில்லை. அப்படி எதற்காக என்று நீங்கள் "செவ்வாய்" சென்று யோசிக்கும் முன்னே நானே சொல்லிவிடுகிறேன். ஒரு தேர்வுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த தேர்வை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதனுடன் இணைந்த என் கனவுகள் மட்டும் மிகப்  பெரிதாய் இருந்தது. இந்த தேர்வை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடனே நான் அதிக நாட்கள் கனவுகளிலே மிதந்தேன். ஏன் என்றால் இதன் மூலம் அத்தனையும் சாத்தியப்படக் கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த சமூகத்தில் என்னுடைய பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது அத்தனையும் இதன் மூலம் செய்யும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இது எல்லாவற்றையும் விட ஒரு மிக பெரிய பாடத்தை இந்த  முயற்சி கொடுத்திருக்கிறது. இதை எல்லோரும் அவர்களுடைய வாழ்வில் தொடர்பு செய்து பார்க்கலாம். எந்த ஒரு காரியும் செய்யும் முன்னர், நாம் அதன் விழைவுகளை பற்றியே ஒரு பெரிய பயத்தில் திளைத்திருப்போம். அதே போல் தான் எனக்கும் முதலில் இருந்தது. ஏனென்றால் என் வாழ்நாளில் கடந்த எந்த பரீட்சைக்கும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. காலத்தின் கட்டாயத்துக்காக மட்டுமே அவைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இதை அப்படி விட முடியாதே. என்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் மிக அதிக அளவில் தொடர்புப் படுத்திக்கொண்டேனே. அதனால் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மிக கஷ்டமாக இருந்தது. இருக்காதா பின்னே. எப்பொழுதும் தேசாந்திரியாய் திரிய நினைக்கும் ஒருவனால் எப்படி பரிட்சைக்குப் படிக்க முடியும். என் பயணங்களையும், சினிமாவையும், நண்பர்களையும் ஏதோ தியாகம் செய்வது போலவே ஒரு பெரிய நினைப்பு என்னை வாட்டி எடுத்தது. வேலைக்கு செல்லாததினால், இரவு கண்விழிக்கும் பழக்கம் வேறு ! நான் முழித்திருக்கும் போது எல்லோரும் தூங்கி விடுவார்கள். எந்திரித்துப் பார்த்தால் தனி ஆளாக நான் மட்டும் வீட்டில் இருப்பேன். ஒரு நாளில், அநேக நேரம் தனியாகவே கழித்தேன். வீட்டில் நண்பர்கள் இருக்கும் போது மட்டுமே நான் மனிதத் தொடர்பில் இருந்தேன்.  நாட்கள் செல்ல செல்ல, இந்த அனுபவம் ஆழமாக பாதிக்க ஆரம்பித்தது.யோசிக்க ஒன்றுமே இருக்காது. ஆனால் யோசிக்க ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் வீணாய்ப் போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லா நினைப்பு என்னை விட்டு விலக ஆரம்பித்தது. எப்பொழுது இந்த பரிட்சை முடியும் என்ற நினைப்பு அகன்று, தேர்வுக்கு தயார் ஆகும் பாங்கு ஆரம்பித்தது. ஒரு ஒழுங்கு அழகாய் பிறந்தது. அது எனக்கே அதிசயமாய் இருந்தது. விளைவுகளை எண்ணாமல் முழு வீச்சுடன் செயல் பட முடிந்ததது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கே தெரியாமல் சந்தோஷத்துடன் தேர்வுக்கு தயார் ஆகிக்கொண்டிருந்தேன். இது பிடிக்கும், இது பிடிக்காது, இதைத்தான் செய்வேன் வேறு எதையும் செய்யமாட்டேன் என்ற போக்கினை சற்று கடந்துவிட்டதாகக் கூட சொல்ல முடியும். என் தேர்வு முடிந்த உடனே ஒரு பெரிய நிறைவு. வெற்றியோ தோல்வியோ, பாதிக்காத மனோபாவம். யோசித்துப் பார்க்கையில் வாழ்வின் அடிநாதமே இது தான் என்று தோன்றுகிறது. தனியாக அதிக நேரம் செலவளித்ததாலோ, அல்லது வேறு எந்த மனோபாவத்தினாலோ இந்த ஆழமான உணர்வு ஏற்பட்டது என்று சொல்லவில்லை. இவ்வளவு  நாள் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று தோன்றுகிறது ! பரவாயில்லை, அது தற்சமயம் முக்கியமில்லை. இந்த அனுபவம் புதியது ! அது தந்த பாடம் பெரியது ! அனைத்து செயல்களையும் இப்படியே செய்ய ஆசை ஆசையாய் இருக்கிறது. இதோ , இரண்டு மாதத்திற்கு பிறகு என் முதல் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். ஆந்திராவுக்கு செல்லவேண்டும் என்று வெகு நாள் ஆசை. ஸ்ரீசைலம் வரை செல்லலாம் என உத்தேசித்திருக்கிறேன். போய் வந்த உடனே அந்த அனுபவத்தை நிச்சயம் பகிர்கிறேன். நீங்களும் அதன் மட்டும் யோசித்துப்  பாருங்கள். காதல், கோபம், குடும்பம், வேலை, ஏன், வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து பாட்டு கேட்கும் போது கூட பிரதிபலனை எதிர்பாராமல் ஒரு விளையாட்டு போல சந்தோசமாய் செய்ய முடிகிறதா என்று? அப்படி இல்லை என்றால் உங்களுக்காக இந்த அனுபவம் காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படிக்கு,
விக்.

Wednesday, June 27, 2012

எனக்காய் பிறந்தவளே !

எனக்காய் பிறந்தவளே, எதற்கோ கோவம் கொண்டாய்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !

- விக்

Friday, June 15, 2012

மறுமுறை ஒருமுறை ?




தவித்து தவித்து என் தாகத்தின் மோகம் குறையவில்லை
நினைத்து நினைத்து என் நெஞ்சத்தின் சோர்வு விளங்கவில்லை
அனைத்துமே எனதாக்க ஆசை ஒன்றுமில்லை
அனைத்திலுமே ஊடுருவி செல்ல என் ஆசை மறக்கவில்லை
தடுக்கி தடுக்கி விழுந்தாலும் தவழ்ந்தே செல்வேன்
தடமே புரண்டாலும் கவிழ்ந்து நிமிர்ந்து எழுவேன்.
நிஜமே நிஜமாய் சொல்லு,
எனக்கு பகையும் உண்டோ ? எதற்கு ?
உன் பகடை என் பக்கம் சாயாது போட்டும்
என் பழியே உன் மீது சேராது போட்டும் !
நன்கு வாழ்வேன், நலமோடு இருப்பேன்
நால் திசைக்கும் போவேன், நானூறு முறை இறப்பேன் - ஆனால்,
என்றும் மறவேன், எதற்கும் துணிவேன்
மறுமுறையேனும் பிறந்து வந்து அடைவேன் !!!!!

- விக்

Saturday, January 7, 2012

கலியுக காதல்கள் !

இந்த தலைப்பு வெகு நாட்களாக என்னை இம்சைப் படுத்திக்கொண்டிருந்தது. ஏனென்றால் நானும் பலமுறை சமூக கட்டமைப்பாகவும், கவர்ச்சியாகவும், ஏக்கமாகவும் திகழும் காதலைப் பற்றி யோசித்ததின் விளைவே ! இதில் என் காதல் மட்டும் அல்ல நான் பார்த்த, கேட்ட, ரசித்த, திகைத்த இப்படி பல யாதும் ஊரே யாவரும் கேளிர் காதல்களும் அடங்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு பெண் என்பவள்  காதலுக்கு அச்சானிப் போலத்தான். அவளை சுற்றியே ஆணின் காதல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட காதல் நம் கலியுகத்தில் எப்படி இருக்கின்றது என்று யோசித்துப் பார்த்தால், நிச்சயமாக விஷ்ணு " கல்கி " அவதாரத்தை எடுத்தே ஆக வேண்டும் போல. காதல் ஆரம்பிக்கும் வயது எவ்வளவு சீக்கிரமாய் இருக்கிறதோ அதே வேகத்தில் முடிந்தும் போகின்றது. இந்த இடைவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் போகும் பயணம் தான் மிக கேவலமாக இருக்கிறது. ஒரு சில புத்திசாலி ஆண்களும் பெண்களும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இந்த பயணத்திர்க்குள்  வராமலே தங்கள் பாலினத்தின் சாகசங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அது காதலிப்பதை விட கேவலமானது. சரி நமது கதாநாயகன் காதலில் தனது இணையை வீழ்த்துவதற்கு படும் பாடு இருக்கிறதே! அது அப்படியே பில்லியன் ஆண்டுகளாய் மாறாத ஒரு பெண்ணின் psychology க்கு எடுத்துக்காட்டு. எப்படி என்று கேட்கிறீர்களா. கற்காலத்தில் ஒரு பெண் தான் தனக்கு வேண்டிய துணையை தேர்வு செய்வாளாம். தனக்கு வரும் துணை தன்னையும் தனது குழந்தையும் திறம்பட பார்த்துக்கொள்வானா, மிருகங்களிடம் சண்டையிட்டு உணவு கொண்டு வரக்கூடிய பலசாலியா என்று யோசித்து தான் தேர்வு செய்வாளம். அது தான் காலம் தொட்டு நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் நம் கலியுக பெண்களும் தேடுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அது நல்ல விஷயம் தான். ஆனால் அப்படியே விட்டுவிடுவது இல்லை நம் கண்ணிகள். பிடிக்கவில்லை என்றால் நேரில் சொல்ல தைரியம் இருக்காது. அல்லது அந்த ஆண் மகனை சட்டையை பிடித்து எல்லா பிரச்சனையும் எடுத்துக்கூறி சட் என்று அவனை கட் பண்ணியாவது விட்டு விட வேண்டும். அதுவும் செய்ய மாட்டார்கள். போனில் ஆரம்பிக்கும் இந்த கூத்து மெல்ல ஒரு சில ஊரசுற்றல்களுக்கு போய் முடியும். ஆசைகள் பெரிதாய் வளர்ந்து வலியே மிஞ்சுகிறது நம் ஆண்சிங்கத்துக்கு. சரி இதை புரிந்துகொண்டு அவன் விலக நினைத்தால் அவ்வளவு தான். பொறுத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களுடன் வாழ முடியாதாம் ஆனால் உருவகப்படுத்தாத ஒரு உறவு  மட்டும் வேண்டுமாம். என்ன சொல்வது இதை. இதே போல் வேறு சில version களும் உண்டு. அப்படியே காதலிக்கத் துவங்கி விட்டால் பெண்களின் முதல் டிமாண்ட் அவர்களுடைய நட்பு வட்டத்தை தவறாக நினைக்கக்கூடாது. எல்லை மீறி பழகும் அவள் நண்பனின் லச்சனத்தை சொன்னால் புரியாது. அதே போல் தங்கள் எல்லைக்குள் வரவிடாமல், சகஜமாகவோ தெளிவாகவோ ஆண்களை கையாளத் தெரிவதில்லை. இப்படிப்பட்ட பலகீனம் நமது முந்திய தலைமுறை அம்மாக்களிடமோ, அக்காக்களிடமோ, காதலிகளிடமோ இருந்தது மிக மிக அரிது.  அவர்கள் இருந்த சமூக கட்டமைப்பு கூட காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் அதே சமூகமே தான் இன்று அவர்களுக்கு இப்படி ஒரு பலகீனத்தை கொடுத்திருக்கிறது. ஏன் இதே போல் பல பலகீனங்கள் நம் ஆண்வர்க்கத்துக்கும் உண்டு. முன்பு எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணிற்கு அலைவார்கள். இப்பொழுது கிடைக்கின்ற எல்லாத்துக்கும் அலைகிறார்கள். எப்படியாவது நாமும் ஏதாவது பண்ணிவிட வேண்டும் என்ற ஒரு ஆதங்கம். சில பேர் ஒரு tag வேண்டும் என்பதற்காவது பெண்ணின் வட்டத்துக்குள் எப்பொழுதும் நுழைய ஆசை படுகிறார்கள். ஒரு நெறியுடன் அவ்வளவாக எந்த ஆணும் பழகுவதாய் தெரிவதில்லை. ஆண்கள் பெரிதாக நட்பு நட்பு என்று பேசுவார்கள். ஆனால் நட்பில் பெண் ஆண் பேதமே கிடையாது என்பது அவர்களுக்கு
புரிவதில்லை. மொத்தத்தில் சொல்லப் போனால் நம் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் தைரியம் கிடையாது. எல்லா பிரச்சனைகளையும் கைகோர்த்து பார்க்கும் பக்குவம் கிடையாது. அவ்வளவு காலம் அது நிலைப்பதுவும் இல்லை. எதிர்த்து நின்று போராடி ஒன்றாய் சுகமாய் வாழும் ஆசை இல்லவே இல்லை. அப்படியே பூசி மொழுகி வாழ்கையை ஓட்டி விடலாம் என்று நினைப்பு. மொத்தத்தில் நாம் பலகீனமான பிறவிகளாய் மாறிவிட்டோம். நாம் ஓடும் சிறு சிறு ஓட்டத்துக்கு யாராரெல்லாம் இளைப்பாற கிடைக்கீறார்களோ அவர்களை அருமையாக பருகிவிட்டு தள்ளாடிய படி ஒரு போதையை நோக்கி பயணிக்கிறோம். பாலினத்திற்கே உரிய கோக்கு மாக்குத்தனத்தை விடுத்து பெண்ணையும் ஆணையும் சமமாக பார்க்கும்  மனோபாவத்திற்கு வருவோம். நான் மேற்கூறிய கருத்திற்கு மாறாக எத்தனையோ குறிஞ்சி மலர்கள் பூத்துக்கொண்டுத்தான் இருக்கின்றன. அவைகள் பெருக வேண்டும். தோட்டமாய் மாற வேண்டும். நம் வீடு முற்றத்தில் பூக்க வேண்டும். அப்படி ஒரு நாள் வராதா என்ற ஏக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு,
விக்.

=======================================================================
மேல் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இது வெறும் ஒரு பார்வை மட்டுமே. தனியாக விலகி நின்று பார்க்கையில் கிடைத்த பார்வை.

Thursday, December 8, 2011

சுமை தூக்கும் கழுதைகள் நாம் !

சீக்கிரம் விடிகின்ற காலை விரட்டி அடிக்கின்றது
பிழைப்புத் தேடி போகின்ற இடம் இருளாயிருக்கிறது
சவம்போல் நான் தூக்கும் கற்களும் வலிக்கின்றது
வருவாய்க்கு வழி செய்கின்ற ராஜாங்கமே வஞ்சிக்கின்றது.
என் கூறை நிழலும் நிலைப்பதாய் தெரியவில்லை
நான் கூற நினைப்பதும் உரைக்குமாவென புரியவில்லை
சுற்றி வாழும் சமூகமே சுடுகின்ற தீயோ நீ ?
வற்றி வதைப்படும் இந்த ஏழை பாவமல்லவோ !
பெரும் பொருள் செய்யும் வணிகர்களே,
கொடுங்கோல் கொண்டு ஆளும் வேந்தர்களே,
சுகமாய் வாழும் உங்கள் வாழ்க்கைக்கு
சுமையை தூக்கும் கழுதையானேன்...

இப்படிக்கு,
விக்...

Thursday, September 8, 2011

மூணார் - ஓர் அதீத உணர்ச்சியா?

என் பிரயாணங்களை எழுத்தாக பதிய வேண்டும் என்று எத்தனையோ முறை ஆசைப்பட்டேன். இது வரை நடந்தது இல்லை. அதற்கு முழு பொறுப்பு நான் தான். ஆனால் கடந்த வாரம் நான் மூணாறுக்கு சென்று வந்தவுடன் அது நிறைவேறப் போகிறது. என் நெஞ்சில் என்றும் அழியா நினைவுகளை உருவாக்கியதுடன் மட்டும் இல்லாமல் என்னை எழுதவும் வைத்துவிட்டது. அதற்கு காரணம் என நான் நம்புவது சரியா என்று தெரியவில்லை. இயற்கையின் பிரம்மாண்டம் தான் மூணார். இந்தப்  பதிவில் எங்களுடைய சுற்றுலா அட்டவணை பற்றியோ நாங்கள் போன இடங்களை பற்றியோ எழுதப் போவது இல்லை. நான் செய்த பயணங்களிலே இயற்கையின் மிக அருகில்  உறவாடியது தான் அதற்கு காரணம் என்று நம்புகிறேன். ஒருவேளை வெள்ளியங்கிரி மலையை முழுவதுமாக ஏறியிருந்தால் அது இதற்கு முன்னமே நடந்திருக்கலாம். காரணம் ஹரிக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். இயற்கையின் பிரம்மாண்டம் என மூணாறை நான் குறிப்பிட்டதற்கு காரணம் அதன் அமைப்பு தான். அந்த சிறு நகரத்தை சுற்றி இருக்கும் தேயிலை தோட்டங்களும், வெறும் 13 km தொலைவில் இருக்கும் ஆனைமுடி சிகரமும் அதன் வரையாடுகளும், அதன் முகட்டுக்கு பின்னால் இருக்கும் அருவிகளும், காடுகளும், கிராமங்களும் என்னை முற்றுமாய் கிறங்கடித்துவிட்டன. இப்பொழுதும் இதை எழுதும் போது கூட தட்டு தடுமாறச் செய்கின்றன. மூணாறை விட்டு கொஞ்சம் வெளியே சென்ற உடனே அதன் அழகை அவ்வளவு அழகாக உணர முடியும். அவ்வளவும் கொள்ளை அழகு. இந்த பயணத்திலே என்னால் என்றும் மறக்க முடியாதது ஆனைமுடி சிகரத்தை தான். 2675 m உயரத்தை கொண்டிருக்கும் அந்த சிகரம் இன்னும் கண்ணை மூடினால் ஞாபகம் வருகிறது. வெகு அருகில் நடந்து சென்று பார்த்தது எதோ  கிடைக்காத அறிய தரிசனத்தை போலே உணர்கிறேன். அதன் மேல் வழிந்த அந்த அருவியும், அதை மறைத்த அந்த மேகங்களும், விவரிக்க முடியாத அந்த சிகரத்தின் நிலப்பரப்பும் நினைக்க நினைக்க சுகம். போட்டோ எடுப்பதை கூட உதறித்தள்ளிவிட்டு எனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே ரசித்தேன். கீழே இறங்கும் போது ஏதோ பெரிய ஏமாற்றத்தை சந்தித்த குழந்தையின் ஏக்கம் ஏன் நெஞ்சில் குடிகொண்டது.

இதன் பிறகு நான் வெகுவாக நடுநடுங்கி போனது என்றால் அது லக்கோம் அருவியில் தான். மிகச் சிறிய அருவி தான் அது. இருந்தாலும் இது வரை நான் குழித்த அருவிகளிலேயே மிக வித்தியாசமான அனுபவம். அந்த நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று யாரும் குழித்திட முடியாது. அவ்வளவு வேகம். இருந்தாலும் கொஞ்சம் முயன்று அருகில் சென்று அந்த சாரலை அனுபவிக்கலாம். அந்த முனைப்புடன் நானும் தேவாவும் நீருக்குள் காலை வைத்தோம். அப்பப்பா அவ்வளவு குளிர். நீரின் வேகமும் அதிகமாய் இருந்தது. முயன்று போய் ஒரு கல்லின் மீது நின்றோம். அதன் பின் நான் அடைந்த உணர்ச்சிகள் பயங்கரமானவை. அந்த சாரல், நீர்வீழ்ச்சியின் சப்தம், கடுமையான குளிர் இது அனைத்தும், என் உடம்பை உலுக்கி விட்டன. இயற்கையின் மீது ஒரு பயம் கலந்த மரியாதையும் அதை ரசிக்கின்ற பாத்தியதையும் கிடைத்ததாகவே நம்புகிறேன். இது போல் என் பயணத்தின் விவரிக்க முடியாத அனுபவங்களும் உணர்சிகளும் எண்ணற்றவை. திரும்பி வருகின்ற வழியில் வெகுவாக மூச்சை இழுத்து வாங்கி கொண்ட பொழுது அந்த நறுமணமும் காற்றும் அவ்வளவு இன்பம். மொத்தத்தில் இந்த பயணம் ஒரு மிகப் பெரிய அனுபவம். எதுவுமே அழுக்காமல் இருக்கும் அந்த திவ்ய சுகம் வாழ்க்கையும் அப்படித்தான் என்று ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. நான் கண்ட அந்தக் காட்சிகளும் எதற்குமே அசராத அந்த கொள்ளை அழகும் இயற்கையின் முன்னால் நாம் ஒன்றுமில்லை என்று முத்தம் கொடுத்துச் சொன்னது போல் இருந்தது. இவ்வளவு பெரிய தாக்கம் ஒரு அதீத உணர்ச்சியாய் நிச்சயம் இல்லை. நான் கடந்த முறை மூணார் சென்ற பொழுது இருக்கும் பக்குவம் இப்பொழுது கொஞ்சம் அதிகமாய் இருப்பது கூட காரணமாய் இருக்கலாம். யாருக்குத் தெரியும் இயற்கையின் விளையாட்டை யாரால் கணிக்க முடியும்.


இப்படிக்கு,
விக்...

Tuesday, August 23, 2011

நானும் என் சமூகமும்

என் பார்வையில் சமுகம் எப்படி இருக்கின்றது என்று யோசித்து பார்க்கையில், முதலில் நான் யார் இதை யோசிப்பதற்கு என்று தோன்றுகிறது. பின் நானும் இதில் ஓர் அங்கம் அதை விட எனக்காக நான் வாழும் சமுகத்தை என்னை விட யாரும் நிர்ணயித்துவிட முடியாது என்பதால் நானே எழுதுகிறேன். இது வெறும் என் பார்வை மட்டுமே !
 என் அன்றாட பொழுதில் நான் அதிகபட்சம் புதிதாக மனிதர்களை சந்திப்பது அரிது. ஆகையில் நானும் எனக்கு ஏற்கனவே நன்கு  பரிச்சையமானவர்களே. இருப்பினும் சுற்றி நடப்பவைகளில் கவனம் செலுத்த முடியாமல் இல்லை. ரொம்ப பெரிதாக முனைந்து முனைந்து ரசித்தாலும் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை. கோபம், வெறுப்பு, தேடல், ஆசை, வக்கிரம் இவையே சமூகத்தில் புலப்படுகின்றன. சினிமா, நாட்டு நடப்பு, குடும்பம், காதல், நட்பு, வேலை, உரையாடல் இவை அனைத்திலுமே ஒரு முட்டுக்கட்டை இருக்கத்தான்   செய்கிறது. நகரத்தில் வாழ்வதினால் இவற்றை இன்னும் சுகமாக சுமக்க வேண்டி இருக்கிறது. முதலில் வெளி உலகிலிருந்து வருவோம். எவ்வளவு அரிதான செய்தியை படித்தாலும்  அது ஆச்சரியத்துடனே நின்று விடுகிறது. மிஞ்சி மிஞ்சி போனால் வருத்தமான செய்திக்கு கொஞ்சும் "து து து" போடுகிறோம். மற்றபடி எதுவும் எந்த தாக்கத்தையும் நம் மக்களிடையே ஏற்படுத்துவதில்லை. ஏன் டீ கடையில் கூட நின்று யாரும் இங்கு பெரிதாக பேசுவது இல்லை. ஆனால் இலவசங்களை பற்றி மட்டும் பேசுகிறார்கள்.
பெரிதாக ஏதாவது நடந்தால் கொஞ்சம் கவனம் காட்டுகிறார்கள்.
இப்பொழுது சினிமாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இன்னும் நம் மக்களிடையே சினிமாவிற்கான மோகம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் இருப்பவர்களுக்கோ அது இன்னமும் அதிகமாகிவிட்டது. நிறைவையும் ஆழ்ந்த சிந்தனையும் தரக்கூடிய சினிமா கிடைப்பது அரிதாகிவிட்டது. ஒருவேளை நமது ரசனை சரியல்லையோ என்னவோ ? பெரிய வியாபாரமாகவே பார்க்கப்படும் நம் சினிமா கொஞ்சம் மன நிறைவையும் அளித்தால் மிகவும் நன்று.
என் பிராயத்தில் இருக்கும் வயதினருக்கு நேரத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, எப்படி போகிறது என்றும் தெரியவில்லை. எங்கள் இளசமுகத்தினரின் கவர்ச்சிக்காக நிறைய விஷயங்கள் இங்கே இருக்கின்றன. நல்ல வேலை, நிறைய பணம், அதிக பகட்டு, ஆபாசம், பைக், கார், தேவையில்லா இங்கிலீஷ், சும்மா சுற்றி பார்ப்பதற்கு ஷாப்பிங் மால், பார்டி, அடுத்தவனுடைய காதலி, என எங்களை ஆக்ரமித்துக்கொண்ட மோகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை உண்மையாக ரசனைக்காக பயன்படுத்தத் தெரியாமல் வெறும் பந்தாவுக்கு மட்டுமே அனுபவிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கின்றோம். முகமுடி அணிந்த முட்டாள்களாய் இருக்கிறோம். மற்றபடி பெரிதாக எங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. குடும்ப சூழ்நிலைகளை எடுத்துக்கொண்டால் அது வேறு ஒரு பாதையில் போய்கொண்டிருப்பதாகேவே தோன்றுகிறது. பிள்ளைகளை புரிந்தது போல் பெற்றவர்கள் நடிப்பதும், அதற்கு எற்றார்போல் பிள்ளைகள் ஆடும் நாடகமும் என்னவென்று சொல்வது. உண்மையான பாசம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஏதுவான சூழ்நிலையை குடும்பங்கள் அமைப்பதில்லை. மற்ற சொந்தங்களை பற்றி மறந்து பொய் பல நாட்கள் ஆயிற்று. ஏன் நான் கடைசியாக என் பெரியப்பாவிடம் எப்போது பேசினேன் என்று ஞாபகம் இல்லை. அதற்கு அவசியம் இல்லாதது போலவே தோன்றிவிட்டது. அடுத்தது கல்வி. அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நல்ல தொழில். அதிக வருமானம். விருப்பம், ஆர்வம் என்பதற்கு ஏதுவாய் இல்லாமல் வெறும் நல்ல வேலை அதிக CTC இவற்றை வைத்தே மாணவர்கள் முன் வைக்கப்படுகிறது. காஸ்ட்லி ஆன MBA அல்லது ஏதாவது வெளிநாடுகளில் MS ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இலக்கிய கல்வியை கொஞ்ச நாளில் syllabus இல் இருந்து எடுத்துவிடுவோம். சமுகத்தின் என்னுடைய புரிதல் இதுவே என படுகிறது. இந்த புரிதல் சரியா தவறா என்று தெரியவில்லை. அனால் இது ஆரோக்யம் இல்லை என்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த புரிதலில் என்னுடைய தவறு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அந்த அளவு என் சமூகத்திடமும் இருக்கிறது. தன்னிச்சையாய் எதுவுமே சாத்தியம் இல்லை. இதற்கு விடை கூட என்னிடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. அதை சொல்லவும் அறுகதை இல்லை. இருப்பினும் என்றோ ஒரு நாள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் இந்த பழைய அழுகிய சித்தாந்தமும் சமூகத்தையும் அசை போடவாவது இந்த பதிவுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்பிக்கையுடன்,
விக்...



Thursday, February 3, 2011

புதியவன்


துகள்கள் பல சேர

உருவான நம் அண்டம்;

வரலாற்றின் பல முரண்பாடால்

படைக்கப்பட்ட நம் கடவுள்கள்;

ஆதாம் ஏவாள் முதலியோர்

யார்? எப்போது? எப்படி?

கிரீன்லாந்தின் 56,452 பேர்!   

மாயன் நாகரீகம் மட்டும்

முற்போக்காய் கணிக்க முடிந்தது எவ்வாறு ?

நிஜ சினிமா, இமயமலை, இரண்டாவது காதல்...

என புரியாமற் போனவைகளும்

ஆகப் புரியச் செய்தவைகளும்

நிஜக் கோணங்களில் இருந்து

விலகியவைகளாய் அல்லாமல்

சராசரி படைப்பின் ஜீவிதத்தோடு

அணுகும்  போல் மற்றுமோர்

புரியாத புதியவனாய் ஆகிறேன்

நான் எனக்கு.

இப்படிக்கு,
விக்...

Wednesday, January 26, 2011

பொரிந்து போன நெஞ்சம்

எத்தனை எத்தனை சித்தாந்தமும்

அத்தனை அத்தனை கோட்பாடும்

சட்டென முன்னால் சாய்கிறதே!

சத்தியம் அன்பு காதலென்று

நீ உரைத்தது எல்லாம் சாகிறதே!

வற்றி போகின்ற நதி போல

வராமல் வருத்தும் வெள்ளம் போல

என் நம்பிக்கை எல்லாம் போகிறதே!

அசட்டுச் சிரிப்பு பதுமையே

அழுக்கு உள்ளம் படைத்தவளே

உன் நிழழும் ஏழனமாய் பார்க்கிறதே!

என் நிஜமும் என்னைவிட்டு பறக்கிறதே!

குருதியும் கண்ணீராய் மாறுதடி

குருடனாய் நானும் போனேனடி

போதும் உன் விளையாட்டு

பொரிந்தே போனேன் என் நெஞ்சோடு.

இப்படிக்கு
விக்...

Sunday, January 23, 2011

கனவில் ஒரு அனுபவம்

காதலின் அவஸ்தைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஒருவனின் வாழ்வில், ஒரு பெண் அவனுடனே கனவில் ஒரு வாரம் இருந்திருப்பாளாயின் அதன் நிகழ்வுகளே இந்த கற்பனை கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------

ஏதும் புரியாது சிந்தித்து கார்த்திக் தனது மொபைல் இல் உள்ள காண்டக்ட்ஸ் ஐ எல்லாம் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு யாருடனாவது
அப்பொழுது அதிகம் பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் யாரும்

Monday, January 10, 2011

உன்னுடன் இருக்கையில்
காதலிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தாய்
உன்னிடமிருந்து விலகுகையில்
காதலை மறப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறாய்

இப்படிக்கு
விக்...

Friday, December 31, 2010

நான் ஏன் மிருகமானேன் ?

பல  முறை  சிந்தித்தபொழுது
என்னையே  நான்  நிந்தித்தேன்
நிபந்தனையின்  பேரில்  என்
வட்ட சதுர  செயல்களை
எண்ணுகையில் மிருகமாயிருப்பதை உணர்ந்தேன். 
நானில்லா  வெளி  துவேஷத்தாலோ
பலமுறை  கூறும்  பொய்களாலோ
முன்விட்டுப்பின்  புறம்  பேசுவதாலோ
பொய்  பாசம் கொண்டதாலோ
நடிப்பதாலோ துடிப்பதாலோ பின் 
சிரிப்பதாலோ  மிருகமாய் மாறிவிடவில்லை
செயற்கையாய்  சிந்தித்த  பொழுதுக்குள்ளே
என்னை  அறியா  பரவசத்தினாலே
வியர்வை  வடிய  போர்வைக்குள்ளே
விடிய  விடிய  காமத்துக்குள்ளே
கன்னிகளோடு உருகும் போதெல்லாம்
சுற்றமும் முற்றும் மறந்தவனாய்
பாதி  கண்கள்  மூடியவனாய்
விம்மும்  நெஞ்சு  உடையவனாய்
வெறிகொண்டு  சுரந்த  போதெல்லாம்
நான்  மிருகமாய்  மாறியிருந்தேன்.

இப்படிக்கு,
விக்...

Wednesday, September 22, 2010

எந்திரன் கதை...

             Professor வசீகரன் தன்னுடைய கடின முயற்சியால் ( புதிய மனிதா பாடல் )உருவாக்கிய Chiti என்ற ரோபோவை International Robotic Conference - இல் அறிமுக படுத்துகிறார் (இங்கயே தொடங்கி விடும் கிராபிக்ஸ் அட்டகாசங்கள். சிட்டி செய்யும் வித்தைகளை ARR இன் இசையோடு அனல் பறக்கும் ரோபோ intro). பிறகு அதன் அருமை பெருமைகளையும் அதனுடைய அளவற்ற சக்தியையும் வெளிப்படையாக காண்பிக்கிறார். அதோடு மட்டும் இல்லாமல் அதற்கு  மனிதனுடைய ஆறாம் அறிவை கொடுக்கும் முயற்சியை தொடரப்போவதாக அறிவிக்கிறார்.

நிழல் அறியா மரம்...

      
நசநசக்கும் என் சொற்களாய் இருந்தால் என்ன


நட்போடு  அதை வாங்கிக்கொள்கிறாய்


படபடக்கும் என் அவஸ்தைகளாய் இருந்தால் என்ன


பற்றோடு என்னை ஏற்றுக்கொள்கிறாய்


தன் நிழல்  அறியா  மரம் போல் இருப்பவளே!


உன் நிஜ வலி தான் என்ன?


எனை ஈன்று நீ பெற்ற வலியை விடவும்


உனை ஈற்று நான் பெற்ற சுகமும்


கருகி போகுதடி என் கண்ணீர் முன்னால்...




இப்படிக்கு,


விக் (என் அம்மாவின் நினைவோடு)....

Sunday, September 12, 2010

சிதறி கிடக்கும் உன் ஆசைகள்.....

ஓவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு ஆசை வந்துருக்கிறது. சில நிறைவேறி திருப்தி படுத்தியிருக்கின்றன.சில வகையறா ஆசைகள் என் தூக்கத்திற்கு முன் வந்து சற்று நேரம் அதன் துவக்கத்தை நீட்டி இருக்கின்றன. ஏன் சில நாட்கள் நானே அந்த முயற்சியில் இறங்கி என் நிறைவேறா ஆசைகளை நினைத்து நினைத்து புரண்டிருக்கிறேன். அப்படி புரளும் பொழுது எந்த வித சலனமும் இல்லாமல் என் ஆசைகள் அவ்வளவு அழகாய் என் மனதில் புரண்டு கொண்டிருக்கும். உண்மையாகத்தான் சொல்லுகிறேன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தேவியிடம் எப்படி பேச வேண்டும் எவ்வாறு அவழுடன் பழக வேண்டும் என்று புழுங்கி கொண்டிருக்கும் போது ஜீவிதா பற்றிய நினைவுகளோ அவளை இன்று மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையின் நினைவோ எனக்கு வந்தேதே இல்லை. எத்தனையோ நாட்கள் " கோ கோ " விளையாட்டில் எங்கள் அணியின் First 3 இல் இறங்கி வெகு நேரம் ஓடி வெற்றியை தேடி தருவது போன்ற நினைவுகளில் இருந்து மீண்டு வர முடிந்ததில்லை.
ஏன் இன்று கூட உடனே தூங்க வேண்டும் என்று நினைத்து வெள்ளித்திரையின் கனவுகளோடு விளையாடி, அதன் துவக்கமாய் இப்படி எழுதுவது என பல ஆசைகள். விளையாட்டுத்தனமாய் பல்வேறு சிறு ஆசைகளோடு போராடி வென்று இருப்பதை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது. ஐயர் கடை பஜ்ஜி, தாத்தா பூ, Beer, முதல் ரேங்க், arrear, no history of arrears( இவை இரண்டுக்கும் ஒரு கதை இருக்கிறது ) , லேப்டாப், ECR drive, நான் கடக்க வைத்த ஒரு முழு இரவு, குட்டி குட்டி கவிதைகள் இப்படி இவைகள் எல்லாமே என்னிடம் தோற்ற ஆசைகள்.மறுபுறம் இன்னும் சில மிக பெரிய ஆசைகளை நோக்கி நகர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றேன். அவற்றுள் பல, யதார்த்த மனித ஆசைகளாகவும், அல்பத்தனமான கனவுகளாகவும், உணர்சிகளின் வெறியாகவும், வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கின்றன. என் நிழல் வாழ்க்கை போராட்டத்துடன் இவை எல்லாம் கலந்துவிட்டன. சிலவற்றை நோக்கி பயனிப்பதுவும் சிலவற்றை கிடப்பில் போடுவதுமாய் நகர்ந்து கொண்டிருக்கின்றேன். நான் அடைந்தே தீர வேண்டும் என்று நினைத்ததை நோக்கி பயணிக்காமல் கூட இருந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவை எனக்கு அசை போடும் பொழுது சுகமாய் இருந்திருக்கின்றன. என் விருப்பத்துக்காக நான் கண்ட ஆசைகளை எல்லாம் கடந்து எனக்குள் ஒரு புது ஆசை முளைத்திருக்கிறது.
அது என் சுற்றத்தின் சிறுபிள்ளைத்தனமாய், எதிர்பார்ப்பாய், அத்தியாவசமாய் என பல்வேறு விதமாய் சிதறி கிடக்கும் ஆசைகளை எல்லாம் மௌனமாய் அவர்கள் மனதில் சென்று பார்ப்பது, உணர்வது மற்றும் ரசிப்பது(அனுமதியோடும் அனுமதி இல்லாமலும்).

இப்படிக்கு,
விக்...

Friday, September 10, 2010

நீ நான் காவியம்....

செப்பு கலந்த தங்கம் போல் இல்லாமல்
செவியில் இறந்த வார்த்தை போல் இல்லாமல்
உற்று உயிர் இறப்பின் போலும்
உயிர் கலந்த நொடி போலும்
சென்று மீண்டும் வந்த நொடி போலும்
தொலைந்து கிடைத்த பொருள் போலும்
சட்டென்று பூத்த மலர் போன்றும்
சலசலப்பு மிகுந்த தருணம் போன்றும்
நான் என்றும் இல்லாமல்
நீ இன்றும் இல்லாமல்
நாம் என்றும் இருப்பதுமாய்
சகலமும் என்றும் நிலைப்பதுமாய்
சவமும் கிடந்ததாலும்
சட்டென்று நிகழும்
நம் நட்பு
நாம் உண்டாக்கிய
காலம் அல்ல காவியம்.....


இப்படிக்கு,
விக்...
( நாம் பூவித்த நம் நட்பிற்காக....)

Friday, September 3, 2010

நான்..

நித்தம் நித்தம் சுமந்தவளுக்கும்,

நினைவில் என்றும் இருப்பவளுக்கும்,

இடைவெளி இல்லா நண்பனுக்கும்,

இதயம் இல்லா எதிரிக்கும்,

அவனுக்கும் இவனுக்கும் ஏன் எவனுக்கும்,

எவரையும் மதியா எதற்கும் அடங்கா

எளிதில் விளங்கா நான் கடவுள் நான்

இப்படிக்கு,

விக்....

Saturday, December 5, 2009

என்னுடைய முதல் ப்ளாக்....

நண்பர்களே,
என்னுடைய வலைப்பூவில் முதல் ப்ளாக்ஐ எழுதுவதில் மட்டற்ற சந்தோஷம்.
தமிழில் எழுத ஆசை பட்டு ஒருவழியாக எனது ஆசையை நிறைவேற்றிவிட்டேன் ( கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ).

இதில் எதை பற்றியும் நான் பேசபோவதில்லை. இந்த அனுபவம் ஒரே ஒரு நினைவைத்தான் கொண்டு வருகின்றது. எப்பவோ ஆர்வப்பட்டு ஏதோ ஒரு சுஜாதா அவர்களின் புத்தகத்தை படிக்கின்ற பொழுது அவர் இணையத்தில் தமிழில்
வலைப்பூவினை உருவாக்குவதும் அதில் உள்ள பிரச்சனைகளை பற்றியும் கூறி இருந்ததும் ஞாபகம் வருகின்றது. யுனிகோட் முறை பற்றியும் தமிழை அம்முறைக்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அவர் கூறி இருந்தார்.
அவருடைய கனவு நிறைவேறியதா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அப்பொழுது படிக்கும் பொழுது ஒன்றும் புரியவில்லை இப்பொழுது கொஞ்சம்
புரிகிறது.........இந்த கருத்தினை படிக்கும் எவரா இருப்பினும் தங்களுடைய கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆ.விக்னேஷ்வரன்.

Followers