வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Tuesday, November 6, 2012

குகைக்குள் சிறு வெளிச்சம்

ஆம் ! இரண்டு மாதமாக ஏதோ குகைக்குள்ளே இருந்து வெளியே வந்தது போல ஒரு உணர்வு. வேலைக்கு போகவில்லை.எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை. பெரிதாக புத்தகம் ஏதும் வாசிக்கவில்லை.சினிமா பார்க்கவில்லை. நெருக்கமான உறவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை, முடி கூட வெட்டவில்லை ! (ரொம்ப நீளமாகிவிட்டது).
ஆனாலும் இந்த இரண்டு மாதமும் மிக ஆழமாகச் சென்றது. என் வாழ்நாளில் இதுவரை எந்த ஒரு காரியத்திற்காகவும் நான் இவ்வளவு நாட்களையும் சக்தியையும் செலவு செய்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு முக்கியமாக எதுவும் எனக்குப் பட்டதில்லை. அப்படி எதற்காக என்று நீங்கள் "செவ்வாய்" சென்று யோசிக்கும் முன்னே நானே சொல்லிவிடுகிறேன். ஒரு தேர்வுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த தேர்வை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதனுடன் இணைந்த என் கனவுகள் மட்டும் மிகப்  பெரிதாய் இருந்தது. இந்த தேர்வை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடனே நான் அதிக நாட்கள் கனவுகளிலே மிதந்தேன். ஏன் என்றால் இதன் மூலம் அத்தனையும் சாத்தியப்படக் கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த சமூகத்தில் என்னுடைய பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது அத்தனையும் இதன் மூலம் செய்யும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இது எல்லாவற்றையும் விட ஒரு மிக பெரிய பாடத்தை இந்த  முயற்சி கொடுத்திருக்கிறது. இதை எல்லோரும் அவர்களுடைய வாழ்வில் தொடர்பு செய்து பார்க்கலாம். எந்த ஒரு காரியும் செய்யும் முன்னர், நாம் அதன் விழைவுகளை பற்றியே ஒரு பெரிய பயத்தில் திளைத்திருப்போம். அதே போல் தான் எனக்கும் முதலில் இருந்தது. ஏனென்றால் என் வாழ்நாளில் கடந்த எந்த பரீட்சைக்கும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. காலத்தின் கட்டாயத்துக்காக மட்டுமே அவைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இதை அப்படி விட முடியாதே. என்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் மிக அதிக அளவில் தொடர்புப் படுத்திக்கொண்டேனே. அதனால் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மிக கஷ்டமாக இருந்தது. இருக்காதா பின்னே. எப்பொழுதும் தேசாந்திரியாய் திரிய நினைக்கும் ஒருவனால் எப்படி பரிட்சைக்குப் படிக்க முடியும். என் பயணங்களையும், சினிமாவையும், நண்பர்களையும் ஏதோ தியாகம் செய்வது போலவே ஒரு பெரிய நினைப்பு என்னை வாட்டி எடுத்தது. வேலைக்கு செல்லாததினால், இரவு கண்விழிக்கும் பழக்கம் வேறு ! நான் முழித்திருக்கும் போது எல்லோரும் தூங்கி விடுவார்கள். எந்திரித்துப் பார்த்தால் தனி ஆளாக நான் மட்டும் வீட்டில் இருப்பேன். ஒரு நாளில், அநேக நேரம் தனியாகவே கழித்தேன். வீட்டில் நண்பர்கள் இருக்கும் போது மட்டுமே நான் மனிதத் தொடர்பில் இருந்தேன்.  நாட்கள் செல்ல செல்ல, இந்த அனுபவம் ஆழமாக பாதிக்க ஆரம்பித்தது.யோசிக்க ஒன்றுமே இருக்காது. ஆனால் யோசிக்க ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் வீணாய்ப் போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லா நினைப்பு என்னை விட்டு விலக ஆரம்பித்தது. எப்பொழுது இந்த பரிட்சை முடியும் என்ற நினைப்பு அகன்று, தேர்வுக்கு தயார் ஆகும் பாங்கு ஆரம்பித்தது. ஒரு ஒழுங்கு அழகாய் பிறந்தது. அது எனக்கே அதிசயமாய் இருந்தது. விளைவுகளை எண்ணாமல் முழு வீச்சுடன் செயல் பட முடிந்ததது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கே தெரியாமல் சந்தோஷத்துடன் தேர்வுக்கு தயார் ஆகிக்கொண்டிருந்தேன். இது பிடிக்கும், இது பிடிக்காது, இதைத்தான் செய்வேன் வேறு எதையும் செய்யமாட்டேன் என்ற போக்கினை சற்று கடந்துவிட்டதாகக் கூட சொல்ல முடியும். என் தேர்வு முடிந்த உடனே ஒரு பெரிய நிறைவு. வெற்றியோ தோல்வியோ, பாதிக்காத மனோபாவம். யோசித்துப் பார்க்கையில் வாழ்வின் அடிநாதமே இது தான் என்று தோன்றுகிறது. தனியாக அதிக நேரம் செலவளித்ததாலோ, அல்லது வேறு எந்த மனோபாவத்தினாலோ இந்த ஆழமான உணர்வு ஏற்பட்டது என்று சொல்லவில்லை. இவ்வளவு  நாள் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று தோன்றுகிறது ! பரவாயில்லை, அது தற்சமயம் முக்கியமில்லை. இந்த அனுபவம் புதியது ! அது தந்த பாடம் பெரியது ! அனைத்து செயல்களையும் இப்படியே செய்ய ஆசை ஆசையாய் இருக்கிறது. இதோ , இரண்டு மாதத்திற்கு பிறகு என் முதல் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். ஆந்திராவுக்கு செல்லவேண்டும் என்று வெகு நாள் ஆசை. ஸ்ரீசைலம் வரை செல்லலாம் என உத்தேசித்திருக்கிறேன். போய் வந்த உடனே அந்த அனுபவத்தை நிச்சயம் பகிர்கிறேன். நீங்களும் அதன் மட்டும் யோசித்துப்  பாருங்கள். காதல், கோபம், குடும்பம், வேலை, ஏன், வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து பாட்டு கேட்கும் போது கூட பிரதிபலனை எதிர்பாராமல் ஒரு விளையாட்டு போல சந்தோசமாய் செய்ய முடிகிறதா என்று? அப்படி இல்லை என்றால் உங்களுக்காக இந்த அனுபவம் காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படிக்கு,
விக்.

Followers