வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Thursday, September 8, 2011

மூணார் - ஓர் அதீத உணர்ச்சியா?

என் பிரயாணங்களை எழுத்தாக பதிய வேண்டும் என்று எத்தனையோ முறை ஆசைப்பட்டேன். இது வரை நடந்தது இல்லை. அதற்கு முழு பொறுப்பு நான் தான். ஆனால் கடந்த வாரம் நான் மூணாறுக்கு சென்று வந்தவுடன் அது நிறைவேறப் போகிறது. என் நெஞ்சில் என்றும் அழியா நினைவுகளை உருவாக்கியதுடன் மட்டும் இல்லாமல் என்னை எழுதவும் வைத்துவிட்டது. அதற்கு காரணம் என நான் நம்புவது சரியா என்று தெரியவில்லை. இயற்கையின் பிரம்மாண்டம் தான் மூணார். இந்தப்  பதிவில் எங்களுடைய சுற்றுலா அட்டவணை பற்றியோ நாங்கள் போன இடங்களை பற்றியோ எழுதப் போவது இல்லை. நான் செய்த பயணங்களிலே இயற்கையின் மிக அருகில்  உறவாடியது தான் அதற்கு காரணம் என்று நம்புகிறேன். ஒருவேளை வெள்ளியங்கிரி மலையை முழுவதுமாக ஏறியிருந்தால் அது இதற்கு முன்னமே நடந்திருக்கலாம். காரணம் ஹரிக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். இயற்கையின் பிரம்மாண்டம் என மூணாறை நான் குறிப்பிட்டதற்கு காரணம் அதன் அமைப்பு தான். அந்த சிறு நகரத்தை சுற்றி இருக்கும் தேயிலை தோட்டங்களும், வெறும் 13 km தொலைவில் இருக்கும் ஆனைமுடி சிகரமும் அதன் வரையாடுகளும், அதன் முகட்டுக்கு பின்னால் இருக்கும் அருவிகளும், காடுகளும், கிராமங்களும் என்னை முற்றுமாய் கிறங்கடித்துவிட்டன. இப்பொழுதும் இதை எழுதும் போது கூட தட்டு தடுமாறச் செய்கின்றன. மூணாறை விட்டு கொஞ்சம் வெளியே சென்ற உடனே அதன் அழகை அவ்வளவு அழகாக உணர முடியும். அவ்வளவும் கொள்ளை அழகு. இந்த பயணத்திலே என்னால் என்றும் மறக்க முடியாதது ஆனைமுடி சிகரத்தை தான். 2675 m உயரத்தை கொண்டிருக்கும் அந்த சிகரம் இன்னும் கண்ணை மூடினால் ஞாபகம் வருகிறது. வெகு அருகில் நடந்து சென்று பார்த்தது எதோ  கிடைக்காத அறிய தரிசனத்தை போலே உணர்கிறேன். அதன் மேல் வழிந்த அந்த அருவியும், அதை மறைத்த அந்த மேகங்களும், விவரிக்க முடியாத அந்த சிகரத்தின் நிலப்பரப்பும் நினைக்க நினைக்க சுகம். போட்டோ எடுப்பதை கூட உதறித்தள்ளிவிட்டு எனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே ரசித்தேன். கீழே இறங்கும் போது ஏதோ பெரிய ஏமாற்றத்தை சந்தித்த குழந்தையின் ஏக்கம் ஏன் நெஞ்சில் குடிகொண்டது.

இதன் பிறகு நான் வெகுவாக நடுநடுங்கி போனது என்றால் அது லக்கோம் அருவியில் தான். மிகச் சிறிய அருவி தான் அது. இருந்தாலும் இது வரை நான் குழித்த அருவிகளிலேயே மிக வித்தியாசமான அனுபவம். அந்த நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று யாரும் குழித்திட முடியாது. அவ்வளவு வேகம். இருந்தாலும் கொஞ்சம் முயன்று அருகில் சென்று அந்த சாரலை அனுபவிக்கலாம். அந்த முனைப்புடன் நானும் தேவாவும் நீருக்குள் காலை வைத்தோம். அப்பப்பா அவ்வளவு குளிர். நீரின் வேகமும் அதிகமாய் இருந்தது. முயன்று போய் ஒரு கல்லின் மீது நின்றோம். அதன் பின் நான் அடைந்த உணர்ச்சிகள் பயங்கரமானவை. அந்த சாரல், நீர்வீழ்ச்சியின் சப்தம், கடுமையான குளிர் இது அனைத்தும், என் உடம்பை உலுக்கி விட்டன. இயற்கையின் மீது ஒரு பயம் கலந்த மரியாதையும் அதை ரசிக்கின்ற பாத்தியதையும் கிடைத்ததாகவே நம்புகிறேன். இது போல் என் பயணத்தின் விவரிக்க முடியாத அனுபவங்களும் உணர்சிகளும் எண்ணற்றவை. திரும்பி வருகின்ற வழியில் வெகுவாக மூச்சை இழுத்து வாங்கி கொண்ட பொழுது அந்த நறுமணமும் காற்றும் அவ்வளவு இன்பம். மொத்தத்தில் இந்த பயணம் ஒரு மிகப் பெரிய அனுபவம். எதுவுமே அழுக்காமல் இருக்கும் அந்த திவ்ய சுகம் வாழ்க்கையும் அப்படித்தான் என்று ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. நான் கண்ட அந்தக் காட்சிகளும் எதற்குமே அசராத அந்த கொள்ளை அழகும் இயற்கையின் முன்னால் நாம் ஒன்றுமில்லை என்று முத்தம் கொடுத்துச் சொன்னது போல் இருந்தது. இவ்வளவு பெரிய தாக்கம் ஒரு அதீத உணர்ச்சியாய் நிச்சயம் இல்லை. நான் கடந்த முறை மூணார் சென்ற பொழுது இருக்கும் பக்குவம் இப்பொழுது கொஞ்சம் அதிகமாய் இருப்பது கூட காரணமாய் இருக்கலாம். யாருக்குத் தெரியும் இயற்கையின் விளையாட்டை யாரால் கணிக்க முடியும்.


இப்படிக்கு,
விக்...

Followers