வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Tuesday, November 6, 2012

குகைக்குள் சிறு வெளிச்சம்

ஆம் ! இரண்டு மாதமாக ஏதோ குகைக்குள்ளே இருந்து வெளியே வந்தது போல ஒரு உணர்வு. வேலைக்கு போகவில்லை.எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை. பெரிதாக புத்தகம் ஏதும் வாசிக்கவில்லை.சினிமா பார்க்கவில்லை. நெருக்கமான உறவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை, முடி கூட வெட்டவில்லை ! (ரொம்ப நீளமாகிவிட்டது).
ஆனாலும் இந்த இரண்டு மாதமும் மிக ஆழமாகச் சென்றது. என் வாழ்நாளில் இதுவரை எந்த ஒரு காரியத்திற்காகவும் நான் இவ்வளவு நாட்களையும் சக்தியையும் செலவு செய்ததில்லை. ஏனென்றால் அவ்வளவு முக்கியமாக எதுவும் எனக்குப் பட்டதில்லை. அப்படி எதற்காக என்று நீங்கள் "செவ்வாய்" சென்று யோசிக்கும் முன்னே நானே சொல்லிவிடுகிறேன். ஒரு தேர்வுக்காக என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த தேர்வை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதனுடன் இணைந்த என் கனவுகள் மட்டும் மிகப்  பெரிதாய் இருந்தது. இந்த தேர்வை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடனே நான் அதிக நாட்கள் கனவுகளிலே மிதந்தேன். ஏன் என்றால் இதன் மூலம் அத்தனையும் சாத்தியப்படக் கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த சமூகத்தில் என்னுடைய பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது அத்தனையும் இதன் மூலம் செய்யும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இது எல்லாவற்றையும் விட ஒரு மிக பெரிய பாடத்தை இந்த  முயற்சி கொடுத்திருக்கிறது. இதை எல்லோரும் அவர்களுடைய வாழ்வில் தொடர்பு செய்து பார்க்கலாம். எந்த ஒரு காரியும் செய்யும் முன்னர், நாம் அதன் விழைவுகளை பற்றியே ஒரு பெரிய பயத்தில் திளைத்திருப்போம். அதே போல் தான் எனக்கும் முதலில் இருந்தது. ஏனென்றால் என் வாழ்நாளில் கடந்த எந்த பரீட்சைக்கும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. காலத்தின் கட்டாயத்துக்காக மட்டுமே அவைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இதை அப்படி விட முடியாதே. என்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் மிக அதிக அளவில் தொடர்புப் படுத்திக்கொண்டேனே. அதனால் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மிக கஷ்டமாக இருந்தது. இருக்காதா பின்னே. எப்பொழுதும் தேசாந்திரியாய் திரிய நினைக்கும் ஒருவனால் எப்படி பரிட்சைக்குப் படிக்க முடியும். என் பயணங்களையும், சினிமாவையும், நண்பர்களையும் ஏதோ தியாகம் செய்வது போலவே ஒரு பெரிய நினைப்பு என்னை வாட்டி எடுத்தது. வேலைக்கு செல்லாததினால், இரவு கண்விழிக்கும் பழக்கம் வேறு ! நான் முழித்திருக்கும் போது எல்லோரும் தூங்கி விடுவார்கள். எந்திரித்துப் பார்த்தால் தனி ஆளாக நான் மட்டும் வீட்டில் இருப்பேன். ஒரு நாளில், அநேக நேரம் தனியாகவே கழித்தேன். வீட்டில் நண்பர்கள் இருக்கும் போது மட்டுமே நான் மனிதத் தொடர்பில் இருந்தேன்.  நாட்கள் செல்ல செல்ல, இந்த அனுபவம் ஆழமாக பாதிக்க ஆரம்பித்தது.யோசிக்க ஒன்றுமே இருக்காது. ஆனால் யோசிக்க ஆரம்பித்தால் அந்த நாள் முழுவதும் வீணாய்ப் போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லா நினைப்பு என்னை விட்டு விலக ஆரம்பித்தது. எப்பொழுது இந்த பரிட்சை முடியும் என்ற நினைப்பு அகன்று, தேர்வுக்கு தயார் ஆகும் பாங்கு ஆரம்பித்தது. ஒரு ஒழுங்கு அழகாய் பிறந்தது. அது எனக்கே அதிசயமாய் இருந்தது. விளைவுகளை எண்ணாமல் முழு வீச்சுடன் செயல் பட முடிந்ததது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கே தெரியாமல் சந்தோஷத்துடன் தேர்வுக்கு தயார் ஆகிக்கொண்டிருந்தேன். இது பிடிக்கும், இது பிடிக்காது, இதைத்தான் செய்வேன் வேறு எதையும் செய்யமாட்டேன் என்ற போக்கினை சற்று கடந்துவிட்டதாகக் கூட சொல்ல முடியும். என் தேர்வு முடிந்த உடனே ஒரு பெரிய நிறைவு. வெற்றியோ தோல்வியோ, பாதிக்காத மனோபாவம். யோசித்துப் பார்க்கையில் வாழ்வின் அடிநாதமே இது தான் என்று தோன்றுகிறது. தனியாக அதிக நேரம் செலவளித்ததாலோ, அல்லது வேறு எந்த மனோபாவத்தினாலோ இந்த ஆழமான உணர்வு ஏற்பட்டது என்று சொல்லவில்லை. இவ்வளவு  நாள் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று தோன்றுகிறது ! பரவாயில்லை, அது தற்சமயம் முக்கியமில்லை. இந்த அனுபவம் புதியது ! அது தந்த பாடம் பெரியது ! அனைத்து செயல்களையும் இப்படியே செய்ய ஆசை ஆசையாய் இருக்கிறது. இதோ , இரண்டு மாதத்திற்கு பிறகு என் முதல் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். ஆந்திராவுக்கு செல்லவேண்டும் என்று வெகு நாள் ஆசை. ஸ்ரீசைலம் வரை செல்லலாம் என உத்தேசித்திருக்கிறேன். போய் வந்த உடனே அந்த அனுபவத்தை நிச்சயம் பகிர்கிறேன். நீங்களும் அதன் மட்டும் யோசித்துப்  பாருங்கள். காதல், கோபம், குடும்பம், வேலை, ஏன், வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து பாட்டு கேட்கும் போது கூட பிரதிபலனை எதிர்பாராமல் ஒரு விளையாட்டு போல சந்தோசமாய் செய்ய முடிகிறதா என்று? அப்படி இல்லை என்றால் உங்களுக்காக இந்த அனுபவம் காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படிக்கு,
விக்.

Wednesday, June 27, 2012

எனக்காய் பிறந்தவளே !

எனக்காய் பிறந்தவளே, எதற்கோ கோவம் கொண்டாய்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !

- விக்

Friday, June 15, 2012

மறுமுறை ஒருமுறை ?




தவித்து தவித்து என் தாகத்தின் மோகம் குறையவில்லை
நினைத்து நினைத்து என் நெஞ்சத்தின் சோர்வு விளங்கவில்லை
அனைத்துமே எனதாக்க ஆசை ஒன்றுமில்லை
அனைத்திலுமே ஊடுருவி செல்ல என் ஆசை மறக்கவில்லை
தடுக்கி தடுக்கி விழுந்தாலும் தவழ்ந்தே செல்வேன்
தடமே புரண்டாலும் கவிழ்ந்து நிமிர்ந்து எழுவேன்.
நிஜமே நிஜமாய் சொல்லு,
எனக்கு பகையும் உண்டோ ? எதற்கு ?
உன் பகடை என் பக்கம் சாயாது போட்டும்
என் பழியே உன் மீது சேராது போட்டும் !
நன்கு வாழ்வேன், நலமோடு இருப்பேன்
நால் திசைக்கும் போவேன், நானூறு முறை இறப்பேன் - ஆனால்,
என்றும் மறவேன், எதற்கும் துணிவேன்
மறுமுறையேனும் பிறந்து வந்து அடைவேன் !!!!!

- விக்

Saturday, January 7, 2012

கலியுக காதல்கள் !

இந்த தலைப்பு வெகு நாட்களாக என்னை இம்சைப் படுத்திக்கொண்டிருந்தது. ஏனென்றால் நானும் பலமுறை சமூக கட்டமைப்பாகவும், கவர்ச்சியாகவும், ஏக்கமாகவும் திகழும் காதலைப் பற்றி யோசித்ததின் விளைவே ! இதில் என் காதல் மட்டும் அல்ல நான் பார்த்த, கேட்ட, ரசித்த, திகைத்த இப்படி பல யாதும் ஊரே யாவரும் கேளிர் காதல்களும் அடங்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு பெண் என்பவள்  காதலுக்கு அச்சானிப் போலத்தான். அவளை சுற்றியே ஆணின் காதல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட காதல் நம் கலியுகத்தில் எப்படி இருக்கின்றது என்று யோசித்துப் பார்த்தால், நிச்சயமாக விஷ்ணு " கல்கி " அவதாரத்தை எடுத்தே ஆக வேண்டும் போல. காதல் ஆரம்பிக்கும் வயது எவ்வளவு சீக்கிரமாய் இருக்கிறதோ அதே வேகத்தில் முடிந்தும் போகின்றது. இந்த இடைவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் போகும் பயணம் தான் மிக கேவலமாக இருக்கிறது. ஒரு சில புத்திசாலி ஆண்களும் பெண்களும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இந்த பயணத்திர்க்குள்  வராமலே தங்கள் பாலினத்தின் சாகசங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அது காதலிப்பதை விட கேவலமானது. சரி நமது கதாநாயகன் காதலில் தனது இணையை வீழ்த்துவதற்கு படும் பாடு இருக்கிறதே! அது அப்படியே பில்லியன் ஆண்டுகளாய் மாறாத ஒரு பெண்ணின் psychology க்கு எடுத்துக்காட்டு. எப்படி என்று கேட்கிறீர்களா. கற்காலத்தில் ஒரு பெண் தான் தனக்கு வேண்டிய துணையை தேர்வு செய்வாளாம். தனக்கு வரும் துணை தன்னையும் தனது குழந்தையும் திறம்பட பார்த்துக்கொள்வானா, மிருகங்களிடம் சண்டையிட்டு உணவு கொண்டு வரக்கூடிய பலசாலியா என்று யோசித்து தான் தேர்வு செய்வாளம். அது தான் காலம் தொட்டு நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் நம் கலியுக பெண்களும் தேடுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அது நல்ல விஷயம் தான். ஆனால் அப்படியே விட்டுவிடுவது இல்லை நம் கண்ணிகள். பிடிக்கவில்லை என்றால் நேரில் சொல்ல தைரியம் இருக்காது. அல்லது அந்த ஆண் மகனை சட்டையை பிடித்து எல்லா பிரச்சனையும் எடுத்துக்கூறி சட் என்று அவனை கட் பண்ணியாவது விட்டு விட வேண்டும். அதுவும் செய்ய மாட்டார்கள். போனில் ஆரம்பிக்கும் இந்த கூத்து மெல்ல ஒரு சில ஊரசுற்றல்களுக்கு போய் முடியும். ஆசைகள் பெரிதாய் வளர்ந்து வலியே மிஞ்சுகிறது நம் ஆண்சிங்கத்துக்கு. சரி இதை புரிந்துகொண்டு அவன் விலக நினைத்தால் அவ்வளவு தான். பொறுத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களுடன் வாழ முடியாதாம் ஆனால் உருவகப்படுத்தாத ஒரு உறவு  மட்டும் வேண்டுமாம். என்ன சொல்வது இதை. இதே போல் வேறு சில version களும் உண்டு. அப்படியே காதலிக்கத் துவங்கி விட்டால் பெண்களின் முதல் டிமாண்ட் அவர்களுடைய நட்பு வட்டத்தை தவறாக நினைக்கக்கூடாது. எல்லை மீறி பழகும் அவள் நண்பனின் லச்சனத்தை சொன்னால் புரியாது. அதே போல் தங்கள் எல்லைக்குள் வரவிடாமல், சகஜமாகவோ தெளிவாகவோ ஆண்களை கையாளத் தெரிவதில்லை. இப்படிப்பட்ட பலகீனம் நமது முந்திய தலைமுறை அம்மாக்களிடமோ, அக்காக்களிடமோ, காதலிகளிடமோ இருந்தது மிக மிக அரிது.  அவர்கள் இருந்த சமூக கட்டமைப்பு கூட காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் அதே சமூகமே தான் இன்று அவர்களுக்கு இப்படி ஒரு பலகீனத்தை கொடுத்திருக்கிறது. ஏன் இதே போல் பல பலகீனங்கள் நம் ஆண்வர்க்கத்துக்கும் உண்டு. முன்பு எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணிற்கு அலைவார்கள். இப்பொழுது கிடைக்கின்ற எல்லாத்துக்கும் அலைகிறார்கள். எப்படியாவது நாமும் ஏதாவது பண்ணிவிட வேண்டும் என்ற ஒரு ஆதங்கம். சில பேர் ஒரு tag வேண்டும் என்பதற்காவது பெண்ணின் வட்டத்துக்குள் எப்பொழுதும் நுழைய ஆசை படுகிறார்கள். ஒரு நெறியுடன் அவ்வளவாக எந்த ஆணும் பழகுவதாய் தெரிவதில்லை. ஆண்கள் பெரிதாக நட்பு நட்பு என்று பேசுவார்கள். ஆனால் நட்பில் பெண் ஆண் பேதமே கிடையாது என்பது அவர்களுக்கு
புரிவதில்லை. மொத்தத்தில் சொல்லப் போனால் நம் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் தைரியம் கிடையாது. எல்லா பிரச்சனைகளையும் கைகோர்த்து பார்க்கும் பக்குவம் கிடையாது. அவ்வளவு காலம் அது நிலைப்பதுவும் இல்லை. எதிர்த்து நின்று போராடி ஒன்றாய் சுகமாய் வாழும் ஆசை இல்லவே இல்லை. அப்படியே பூசி மொழுகி வாழ்கையை ஓட்டி விடலாம் என்று நினைப்பு. மொத்தத்தில் நாம் பலகீனமான பிறவிகளாய் மாறிவிட்டோம். நாம் ஓடும் சிறு சிறு ஓட்டத்துக்கு யாராரெல்லாம் இளைப்பாற கிடைக்கீறார்களோ அவர்களை அருமையாக பருகிவிட்டு தள்ளாடிய படி ஒரு போதையை நோக்கி பயணிக்கிறோம். பாலினத்திற்கே உரிய கோக்கு மாக்குத்தனத்தை விடுத்து பெண்ணையும் ஆணையும் சமமாக பார்க்கும்  மனோபாவத்திற்கு வருவோம். நான் மேற்கூறிய கருத்திற்கு மாறாக எத்தனையோ குறிஞ்சி மலர்கள் பூத்துக்கொண்டுத்தான் இருக்கின்றன. அவைகள் பெருக வேண்டும். தோட்டமாய் மாற வேண்டும். நம் வீடு முற்றத்தில் பூக்க வேண்டும். அப்படி ஒரு நாள் வராதா என்ற ஏக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு,
விக்.

=======================================================================
மேல் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இது வெறும் ஒரு பார்வை மட்டுமே. தனியாக விலகி நின்று பார்க்கையில் கிடைத்த பார்வை.

Followers