வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Tuesday, September 17, 2013

எல்லாம் தெரிஞ்சுக்க ஆசை !!!

எல்லோருக்கும் ஏதாவது செய்தி தேவைப்பட்டு கொண்டிருக்கின்றது. உடல் நலத்தை பற்றியோ, தங்கள் ஆபீஸ் பற்றியோ, சினிமாவோ, நடப்புகள் பற்றியோ, தங்களின் புதிய முயற்சிகள் பற்றியோ, காதல், கல்யாணம் இப்படி நம் சுற்றம் பற்றி எதாவது ஒரு துணுக்கு செய்தி நம்மை ஆச்சிரிய படுத்துவதற்கும் வாதங்களை சுவாரசிய படுத்துவதற்கும் தேவைப்பட்டுத்தான் இருக்கின்றது. ஆனால் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் ஓரளவுக்குத்தான் அவை உபயோகமாய் இருக்கின்றன. எதை பத்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இப்பொழுது அது ஒரு பெரிய விடயம் இல்லை. இணையமும் கூகுளும் இருக்கும் வரை நீங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. கர்னாடக சங்கீதத்திலிருந்து புதிதாய் வந்த நீயா நானா எபிசொட் வரை அத்தனையும் கிடைக்கும். உங்களுக்கு புதியதாய் எதன் மீது மோகம் வந்தாலும் சரி, அல்லது கொஞ்சம் காலம் முன்னரோ பின்னரோ  வாழ்வது போல் இருந்தாலும் சரி. அத்தனைக்கும் நிறைய புலம்பல்களும் புதிய ஆச்சர்யங்களும் உங்கள் browser இல் வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றது. உங்களுக்கு தேவை எல்லாம் கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சம் பயித்தியக்காரத்தனமும் தான். மற்றதை எல்லாம் உங்கள் நேரம் பார்த்துக்கொள்ளும். இந்த முயற்சிகளை எடுக்க, நீங்கள் கொஞ்சம் வாழ்கையின் சுவாரசிய கேள்விகளுக்கு பதில் தேட முற்பட்டால் தான் நடக்கும். இல்லையென்றால் சவாகாசமாக நீங்களாகவே ஒரு உலகத்தை உங்களுக்கு உருவாக்கிக்கொண்டு, சரி தவறுகளை நிர்ணயித்துக்கொண்டு, பின்னாளில் அவைகள் அனைத்தும் முட்டாள்தனம் என்று பின்னொரு காலத்தில் உணர்ந்து கொண்டு வாழலாம். ஆதலால், பெரிதாக எதற்கும் உங்களை தொடர்பு கொண்டு பார்க்காதீர்கள். இந்த உலகம் மிக பழமையானது. உங்களுக்கு பின்னாடியும் முன்னாடியும் பல பேர் வாழ்ந்து முடித்தும் வாழ போவதற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பட்டா போட்டுக்கொண்ட இடமும், உங்கள் காதலியும், உங்கள் எண்ணப் பிரதிகளும், பிடித்த இசையும், இப்படி எல்லாவையும் இந்த உலக நியதிக்கு பொதுவானது தான். செயற்கைத்தனமான போலியான நம் மனப் புலம்பல்களுக்காக அவைகளை சொந்தம் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.  எல்லார்க்கும் இங்கு எல்லாமும் உண்டு. ஆனால் எதுவும் நிரந்திரம் இல்லை. காலத்தின் கட்டளைக்கு ஏற்ப இந்த பூமி மாறிக்கொள்வது போல் மாறிக் கொள்ளுங்கள் . முடிந்த வரை நாம் அனைவரும் இலகுவாக இருக்க பழகுவோமே ! ஏன் நமக்குள் இத்தனை இறுக்கம் ? எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நல்லது தான். அதே சமயம் நம் வாழ்வின் ஆச்சர்யங்களையும் நியதியையும் மறக்கத் தேவை இல்லை. அதிக பட்சம் நமக்கு இந்த உலக நடப்புகளோ, வெள்ளிக்கிழமை வெளியாகும் புதிய படத்தை பற்றியோ, அரசாங்கத்தின் சட்ட திட்டத்தை பற்றியோ தெரியாமல் போகும். பரவாயில்லை. யாருக்கு என்ன நஷ்டம். எதனுடனும் தொடர்பு படுத்திக்கொள்ளாமல் அனைத்தையும் தெரிந்து கொள்ள முற்படுங்கள். இதில் பிரச்சனை குறைவு. ஆனால் நிறைவு அதிகம். அப்படியே இதில் அலுப்பு தோன்றினாலும், கொஞ்சம் யோசித்து பார்கையில், உங்கள் சுற்றம் என்ன உங்களுக்கு தெரிந்தவை வற்றா இயங்கிக் கொண்டிருக்கின்றன? இல்லவே இல்லை. எவ்வளவு முக்கினாலும், நாம் சொல்ல விழைவதை அவர்களுக்கு தெரிந்த ஒன்றோடு தான் தொடர்பு படுத்திப் பார்க்கின்றார்கள். அதே சமயம் சுயநலமற்ற இந்த பிரயத்தனங்கள் என்றாவது ஒரு நாள் யாருக்காவது உபயோகம் ஆகத்தான் செய்யும்.அப்பொழுது  எந்த கர்வமும் இல்லாமல் சந்தோசமாக உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர முடியும். இல்லாவிடில் என்ன, அவை உங்களோடு மறைந்து போகும். எப்படியும்  நம் இடுகாடிற்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்படிக்கு,
விக்.

Friday, February 8, 2013

சதுரகிரி சாரல்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மலைகள் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டவை. 800 m க்கு மேல் உள்ள மலைகளுள் எவையெல்லாம் எறக்கூடியதோ, அவை அனைத்தும் தரக்கூடிய அனுபவம் மிக அருமையானது. ஆன்மிகம் அல்லாமல் கூட ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்க வல்லது என்பதை மட்டும் உறுதியாய் என்னால் சொல்லடியும். அதை முதன் முதலில் அனுபவித்தது வெள்ளிங்கிரி மலையில். உடம்பிற்கும் மனதிற்கும் பெரிய சவாலைத் தரும். ஒரு சில இடங்களில் மிக அழகான இயற்கை , மறுபக்கம் உடல் சோர்வு மற்றும் நேரம் இல்லாமை. இவை அனைத்தையும் சமாளிக்கும் திராணியும் அவையே கொடுத்து விடும்.அப்படி ஒரு மலை தான் சதுரகிரி. விளையாட்டாய் நண்பர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை இந்த வலைக்குள் இழுத்தேன். மாட்டிக்கொண்டார்கள். கிளம்பிவிட்டோம்.


தொகுத்துக் கூற முடியாத அளவு அனுபவங்கள். நடந்து செல்லும் மலையின் அருகே இன்னொரு சிகரம். அந்த சிகரத்தின் வழுக்கான முகட்டில் முழைத்த காய்ந்த பதர்கள், அருவி ஓடிய பாதை இப்படி அழகோ அழகு. வெளிச்சம் குன்றிய இரவில், வானத்தைப்   பார்த்தால், ஒளிரும் நட்சத்திரங்கள் மிக அருகில். பின்னர், மிகுந்த குளிரில் மன்றாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு தேவதை தென்பட்டாள். ஆம், அப்பொழுது தான் குழித்துவிட்டு, தன நீண்ட கூந்தலை படர விட்டபடி கருப்பு சேலையுடன் வெளியே வந்தாள். ஆபாசமே இல்லாத அழகு. பெண்மையை இப்படியும் ரசித்தது இதுவே முதல் முறை. பிழைப்பிற்காக அங்கு வந்து கடை நடத்துகிறாள், தன் கணவனுடன். இரண்டாம் நாள் காலையில் தவசி பாறையை பார்க்க வேண்டும் என்று இன்னும் சற்று மேலே ஏறினோம். தவசி பாறையின் அடியில் ஒருவர் படுத்தே செல்லக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. ஊர்ந்து சென்று பார்த்தால், உள்ளே ஒரு லிங்கமும், தியானம் செய்யக்  கூடிய அளவிற்கு இடமும் இருக்கிறது. முந்திரிக்கொட்டையாய் முதலில் சென்ற பொழுது, பயங்கர திகிலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. எந்த எண்ணம் பழங்கால மனிதர்களை இப்படி ஒரு தனிமையை தேடிச் செல்ல வைத்தது என்று யோசிக்கையில், முற்காலங்களில் நிறைய தனிமை இருந்தது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. ஏறுகையிலும் இறங்கும் பொழுதும் எண்ணற்ற மனிதர்கள். ஏன் என் நண்பர்கள் கூட அங்கே சென்றவுடன் சற்று வேறு விதமாய்த் தான் தென்பட்டார்கள். அது அந்த இடத்தினாலோ அல்ல வேறு ஏதோ மாற்றத்தின் வித்தாய் கூட அமைந்திருக்கலாம். அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் கூட இது நடந்திருக்கலாம். ஆனால், அந்த மாற்றத்தை மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்னுள் கூட அது எனக்கு முன்பாகவே நடந்தது. மற்றபடி, இன்னும் நிறைய ஆச்சரியங்கள் அந்த மலையில் உள்ளன.அவற்றை சொல்லத் தேவையில்லை. அனுபவமாகவே அது அமைய வேண்டுமே தவிர செய்தியாகி விடக்கூடாது.வருத்தம் என்னவென்றால், அதிக அளவிலான மக்கள் கூட்டம் என்னென்ன விழைவுகளை ஏற்படுத்துமோ, அது அங்கே பலித்து விட்டது. நீங்கள் ஏறிச்சென்று பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தால், அந்த ரம்யம் பிம்பமாக மாறி உங்களுக்குள் ஊடுருவும் போது, கொஞ்சம் அமைதியாக கவனிக்க முற்படுங்கள். அந்த சதுரகிரி சாரல் உங்களையும் வருடட்டும்.
இப்படிக்கு,
விக்.

Followers